Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தூத்துக்குடி - நெல்லை இடையே காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

தூத்துக்குடி, அக். 10: தூத்துக்குடி - நெல்லை இடையே பீக் அவரில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தினசரி பயணிப்போரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட துறையினர் இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நெல்லையில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு பணிகளுக்கு செல்வோர், பள்ளிகள், பாலிடெக்னிக் மற்றும் பொறியியல், சட்டக்கல்லூரி, கலைக்கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவியர், தனியார் நிறுவன ஊழியர்கள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த தடத்தில் பயணம் செய்து வருகின்றனர்.

மேலும் உயர் மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்காக நெல்லையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் என நூற்றுக்கணக்கானோரும் தினமும் பஸ்களையே பெரிதும் நம்பியுள்ளனர். இதனால் தினந்தோறும் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது தற்போது இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை.

குறிப்பாக பீக் அவரான காலை மற்றும் மாலை வேளைகளில் பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. அதிலும் திங்கள் கிழமை காலை மற்றும் வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம், வழக்கத்தை விட 5 மடங்கு அதிகமாக காணப்படுகிறது.

திருவிழா, விடுமுறை நாட்கள், முகூர்த்த நாட்களில் அனைத்து பஸ்களுமே நிரம்பி வழிகின்றன. இதனால் பஸ் நிலையங்களிலும், நிறுத்துமிடங்களிலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். பஸ்களில் சீட் பிடிக்கும் விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்படுவதும் தொடர் கதையாக உள்ளது. இதை தவிர்ப்பதற்காக பலரும் மில்லர்புரம், மையவாடி, கோர்ட் ஸ்டாப் சென்று அங்கிருந்து 1டூ1 பஸ்களில் ரூ.10 டிக்கெட் எடுத்து பஸ் நிலையம் வந்து அதே பஸ்களில் சீட் போட்டுக்கொள்கின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் காத்திருப்போருக்கு சீட் கிடைக்காமல் நின்று கொண்டே பயணிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.

எனவே இதுபோன்ற நிலையை தவிர்க்கும் வகையில் காலை மற்றும் மாலை நேரங்களில் தூத்துக்குடி - நெல்லை இடையே கூடுதல் பஸ்களை இயக்குவதற்கு அரசு போக்குவரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நெரிசலை பயன்படுத்தி

செல்போன்கள் பறிப்பு

பஸ்சில் சீட் பிடிப்பதற்காக ஏற்படும் நெரிசலை பயன்படுத்தி பயணிகளிடம் இருந்து செல்போன்களை பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த மாதம் ஒரே நேரத்தில் 3 பெண்களிடம் அடுத்தடுத்து செல்போன்களை அபேஸ் செய்த தூத்துக்குடியை சேர்ந்த முனியம்மாள்(39) என்ற பெண்ணை மத்தியபாகம் போலீசார் கைது செய்துள்ளனர்.