தூத்துக்குடி, அக். 9: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் நாளை (சனிக்கிழமை) பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விஷூ மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சிறப்பாகச் செயல்படும் வகையில், அக்டோபர் மாதத்திற்கான சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம், நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களில் அமைந்துள்ள வட்டாட்சியர் (தாசில்தார்) அலுவலகங்களில் நடைபெறுகிறது.
இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் தங்களது மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் மற்றும் பெயர் திருத்தங்கள் செய்தல், புதிய உறுப்பினர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோரி விண்ணப்பித்தல், குடும்பத் தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்தால், முகாமிலேயே நேரடியாகப் புகைப்படம் பதிவேற்றம் செய்தல் ஆகிய அனைத்துச் சேவைகளும் சரிசெய்து வழங்கப்பட உள்ளன. மேலும் முகாமில் நியாயவிலைக் கடைகளின் செயல்பாடு மற்றும் பொது விநியோகத் திட்டம் தொடர்பான மற்ற குறைகளையும் பொதுமக்கள் தெரிவித்துப் பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


