குளத்தூர், அக். 8: குளத்தூர் - முள்ளூர் வழிச்சாலை, கல் குவாரியில் இருந்து செல்லும் லாரிகளால் கடுமையாக சேதமடைந்துள்ளது. சாலைகளில் ஜல்லி கற்களை கொட்டியபடி வேகமாக செல்வதால் விபத்து அபாயமும் காணப்படுகிறது. குளத்தூரில் இருந்து முள்ளூர் வரை செல்லும் கிராமச்சாலை சுமார் 6 கிமீ தூரம் உள்ளது. இச்சாலை வழியாக முள்ளூர், முத்துக்குமாரபுரம், வீரபாண்டியபுரம், த.சுப்பையாபுரம், அய்யர்பட்டி போன்ற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குளத்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் இச்சாலை கடந்த பல மாதங்களாக முள்ளூரையடுத்த கொல்லம்பரும்பு அருகே உள்ள தனியார் கல் குவாரியில் இருந்து செல்லும் கனரக வாகனங்களால் சிதிலமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காட்சியளிக்கிறது.
இச்சாலை வழியாக தனியார் கல் குவாரியில் இருந்து அளவுக்கு அதிகமாக ஏற்றி வரப்படும் ஜல்லி கற்கள் சாலையில் சிதறி கிடக்கின்றன. மேலும் லாரிகள் அனைத்தும் கடும் வேகத்துடன் செல்வதால் விபத்து அபாயமும் காணப்படுகிறது. இவ்வழியாக செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் குளத்தூர் காவல் நிலையத்தை தாண்டித்தான் செல்கின்றன. காவல் நிலையத்திற்கு முன்பாகவும் ஜல்லிக்கற்களை சிதறி விட்டு அதிவேகமாகத்தான் சென்று திரும்புகின்றன. ஆனால் போலீசாரும் கண்டுகொள்ளாமல் இருப்பதால் தினசரி இச்சாலையில் செல்வது பாதுகாப்பான பயணமாக இல்லை என கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறுகையில், பருவமழை காலம் துவங்கி விட்டால் இப்பகுதியில் விவசாயப் பணிகள் சூடுபிடிக்கும். அப்போது விவசாய வேலைகளுக்கு ஆட்களை அழைத்து வருவதற்கு வாகனங்களை அழைத்தால் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்று காட்சியளிப்பதால் வாகன ஓட்டுநர்கள் வர மறுப்பர். எனவே சிதிலமடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் விபத்துகளை தடுக்கும் வகையில் தறிகெட்டு செல்லும் குவாரி லாரிகளை கட்டுப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றனர்.


