செய்துங்கநல்லூர், செப். 8: ஆறாம்பண்ணையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 3 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இவர்களை அருகிலுள்ள கொங்கராயகுறிச்சி பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. கருங்குளம் அருகே ஆறாம்பண்ணை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 60 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த பள்ளியில் 150க்கும் மேற்பட்டோர் படித்து வந்துள்ளனர். ஆண்டுகள் செல்ல செல்ல தனியார் பள்ளி மோகம் காரணமாகவும், பலர் கிராமத்தை காலி செய்து வெளியூருக்கு இடம் பெயர்ந்ததாலும் மாணவர்கள் சேர்க்கை குறைந்து தற்போது 3 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர். இதில் மாற்றுத்திறனாளி மாணவர் 7ம் வகுப்பும், மற்ற இருவர் முறையே 4 மற்றும் 5ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்கள் மூவரும் ஆறாம்பண்ணை மற்றும் நடுவக்குறிச்சியை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களுக்கு 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
பழமையான இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் 3 மாணவர்கள் மட்டுமே பயிலும் நிலையில் அவர்களை அருகிலுள்ள கொங்கராயகுறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்த்தால், சக மாணவர்களுடன் இணைந்து கல்வி பயில்வதுடன் விளையாட்டு, உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் இங்குள்ள ஆசிரியர்களை பற்றாக்குறை நிலவும் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து பஞ். முன்னாள் தலைவர் ஷேக் அப்துல்காதர் கூறுகையில், “சமீப காலமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது. ஆறாம்பண்ணை பள்ளியில் 3 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர். அவர்கள் சக மாணவர்களுடன் இணைந்து விளையாடவும், உடற்பயிற்சி செய்யவும் வாய்ப்பில்லாத சூழல் உள்ளது. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பது போன்ற நிலை காணப்படுகிறது.
எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களை அருகில் உள்ள கொங்கராயகுறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க வேண்டும். இதுகுறித்து வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வித்துறை உயரதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
ஓய்வெடுக்கும் இடமாக மாறிய பள்ளி வளாகம்
மாணவர்கள் எண்ணிக்கை இன்றி பள்ளி வளாகம் வெறிச்சோடி காணப்படுவதால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் ஓய்வெடுக்கும் இடமாக பள்ளி வளாகம் மாறியுள்ளது. எனவே பள்ளியின் நிலை குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


