Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்செந்தூர் - நெல்லை நெடுஞ்சாலையில் நல்லூரில் ஆமை வேகத்தில் ரயில்வே மேம்பால பணிகள்

திருச்செந்தூர், ஜூலை 8: திருச்செந்தூர் - நெல்லை நெடுஞ்சாலையில் நல்லூர் கேட்டில் 2 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் ரயில்வே மேம்பால பணிகள் நடப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தென் தமிழகத்தின் ஆன்மீக நகரங்களான திருச்செந்தூர் மற்றும் நெல்லை இடையே சுமார் 55 கி.மீ. தொலைவிலான நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலை திருச்செந்தூரில் இருந்து நகராட்சி எல்லையை தாண்டி நத்தக்குளம் கிராமத்தில் 2 வளைவுகளை கடந்து நல்லூர் ரயில்வே கேட், குரும்பூர், தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, வைகுண்டம், கருங்குளம், செய்துங்கநல்லூர், கிருஷ்ணாபுரம், வி.எம்.சத்திரம், பாளைய.யை தாண்டி நெல்லையில் சேர்கிறது.

இந்த நெடுஞ்சாலையில் நாள்தோறும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கார், வேன், பேருந்துகள், அரசு பேருந்துகள், தொழில் நிமித்தமாக சரக்கு வாகனங்கள், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் என ஆயிரக்கணக்கானவை கடந்து செல்கின்றன. குறிப்பாக திருச்செந்தூரில் அடிக்கடி நடக்கும் திருவிழாக்களுக்கும், வார விடுமுறை நாட்களுக்கும் வரும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் எண்ணிலடங்காதவை. இதனால் பக்தர்கள் மற்றும் போக்குவரத்து வசதிக்காகவும் இச்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த சாலையில் உள்ள ஒரே ரயில்வே கேட் நல்லூர் ஆகும். நெல்லை மார்க்கமாக திருச்செந்தூர் வரும் பக்தர்களின் வாகனங்கள் மற்றும் அரசு பஸ்கள், நல்லூர் கேட்டில் மட்டுமே ரயில் வரும் நேரத்தில் காத்திருக்கும் சூழல் உள்ளது. இங்கும் வாகனங்கள் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த 2024ம் ஆண்டு முதல் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. நல்லூர் ரயில்வே மேம்பால பணியானது, சென்னை - கன்னியாகுமரி தொழில்தட திட்டத்தின் கீழ் நெல்லை கோட்ட நெடுஞ்சாலைத்துறையினரால் பொறியியல் கொள்முதல் மற்றும் கட்டுமான ஒப்பந்த அடிப்படையில் ரயில்வே துறையின் அனுமதியுடன் நடைபெற்று வருகிறது.

இத்திட்டம் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி ரூ.23.17 கோடி செலவில் குரும்பூர் மற்றும் ஆறுமுகநேரி ரயில் நிலையங்கள் இடையே திருச்செந்தூர் வட்டம், நல்லூரில் அமைக்கப்படும் மேம்பாலம் ஆகும். இந்த பாலம் சுமார் 700 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலத்திலும் அமைகிறது. இதற்காக நல்லூர் பகுதியில் ரயில் பாதையின் இருபுறமும் உள்ள நிலங்கள் எடுக்கப்பட்டு அவற்றில் பல்வேறு நிலை கட்டுமானங்களை கடந்து மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

2025ம் ஆண்டில் இப்பணிகள் நிறைவு பெறும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்த போதிலும் 2 ஆண்டுகளைக் கடந்து தற்போதும் பாலம் அமைக்கும் பணி நிறைவுபெறவில்லை இதனால் நல்லூர் கேட்டிற்கு முன்னும், பின்னும் உள்ள நெடுஞ்சாலை சேதமடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளதால் பகல் நேரங்களில் வாகனங்கள் பெரும் தூசியை கிளப்பிக்கொண்டு செல்வதால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த இடமே இருள் சூழ்ந்து உள்ளதால் பெரும் பீதியுடனே வெளியூரில் வரும் பக்தர்களும், வாகன ஓட்டிகளும் கடந்து செல்கின்றனர்.

எனவே மேம்பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்தி இப்பகுதியில் சாலையின் இடது பக்கத்தில் வயல்வெளிகள் உள்ளதால் அதனை வாகன ஓட்டிகள் தெரிந்திடும் வகையில் எச்சரிக்கை பதாகைகள் மற்றும் மின் விளக்குகள் அமைத்தும் பழுதடைந்துள்ள நெடுஞ்சாலைகளையும், அவசர பயன்பாட்டிற்காக சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.