கோவில்பட்டி, செப். 7: தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலப் பணிகள் நடக்கும் இடங்களில் காற்றில் பறக்கும் உலர் சாம்பல் கலவையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் சாலையோர வீடுகளில் வசிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி- எட்டயபுரம்- மேலக்கரந்தை- பந்தல்குடி- மதுரை வரையிலான மாநில நெடுஞ்சாலை, கடந்த 2007ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த சாலை வழியாக தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. தூத்துக்குடி முதல் மதுரை வரையிலான இச்சாலையில் பல்வேறு கிராம விலக்குகளில் மின்விளக்குகள் மற்றும் பேருந்து நிறுத்த நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கிராம விலக்குகளில் உள்ள யூ-வளைவுகளில் பொதுமக்கள் சாலையை கடக்கும்போது எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன. இதனை தடுக்கும் வகையிலும், நெடுந்தூரத்தில் இருந்து வரும் வாகனங்கள் தடையின்றி பாதுகாப்பாக பயணிக்கும் வகையிலும், காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட விபத்து வழக்குகளின் அடிப்படையில் விபத்துகள் அதிகம் நடைபெறும் கிராம விலக்குகள் கண்டறியப்பட்டன. அதன்படி மதுரையில் இருந்து தூத்துக்குடி வரை முதற்கட்டமாக மதுரை மாவட்டம் வலையங்குளம், தூத்துக்குடி மாவட்டம் வெம்பூர், மேலக்கரந்தை, தாப்பாத்தி, எப்போதும்வென்றான் உள்ளிட்ட 8 இடங்களில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாலம் கட்டும் பணியின்போது வாகனங்கள் செல்வதற்கு வசதியாக சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பாலம் அமைக்கும் இடங்களில் இருந்து இணைப்பு சாலை பணிகளுக்காக தற்போது சரள் மற்றும் உலர் சாம்பல் கலவை குவியல், குவியலாக கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீசி வருவதால் சாலையில் கொட்டப்பட்டுள்ள உலர் சாம்பல் கலவை காற்றில் பறந்து வாகனங்கள், வாகன ஓட்டிகள் மற்றும் சாலையோர குடியிருப்புகளில் விழுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக சாலையோர வீடுகளில் சாம்பல் படிந்து வருவதால் பொதுமக்கள் உணவு சாப்பிடக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையோர கடைகளில் வியாபாரம் செய்வோரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் பாலம் கட்டும் பணியை மேற்கொள்ளும் நிறுவனத்தினர் தினமும் உலர் சாம்பல் கலவையை மலைபோல் குவித்து வருவதால், பலத்த காற்று வீசும்போது பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே சாலை பணிகளுக்காக கொட்டப்படும் உலர் சாம்பல் கலவையின் மீது காலை, மதியம், மாலை என தினமும் போதிய அளவு தண்ணீர் தெளித்து ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும். வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு மற்றும் பாலம் கட்டும் பணியை மேற்கொள்ளும் நிறுவனம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் வலியுறுத்தி உள்ளார்.


