செய்துங்கநல்லூர், செப். 7: கருங்குளம் வட்டார பகுதி கிராமங்களில் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கருங்குளம் வட்டாரத்துக்குட்பட்ட கருங்குளம், ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி, ஆழ்வார்கற்குளம், செய்துங்கநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் சுமார் 2 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இரவு 9 மணி முதல் 11 மணி வரை மின்சாரம் தடைபடுவதாக கூறப்படுகிறது.
தற்போது சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் வீடுகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படுகிறது. இரவு நேரத்தில் தொடர்ந்து 2 மணி நேரம் மின்சாரம் தடைபடுவதால் குழந்தைகள், வயதானவர்கள் உள்ளிட்டோர் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்த முடியாததால் தூக்கமின்றி பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இரவு நேரங்களில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாக சரிசெய்து, பொதுமக்களுக்கு தடையின்றி சீரான மின்சாரம் வழங்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


