ஆறுமுகநேரி, ஆக. 7: காஞ்சிபுரம் மாவட்டம் நாயக்கன்பேட்டை ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் வினோத் கண்ணன் (41). கடந்த 4ம் தேதி திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி பேயன்விளையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் மொட்டை போட்டு விட்டு திரும்பிய வினோத் கண்ணன், நண்பர்களான ஆறுமுகநேரி லட்சுமி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த லட்சுமணன் (43), இதே பகுதியைச் சேர்ந்த சுதாகருடன் (45) காரில் பேயன்விளையில் இருந்து காயல்பட்டினம் நோக்கி சென்றுள்ளார். ரத்னாபுரி அருகே வரும்போது எதிரே வந்த அரசு பஸ் மீது கார் உரசிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் வினோத் கண்ணனை காஞ்சிபுரத்திற்கு பஸ் ஏற்றி விடுவதற்காக காயல்பட்டினத்தில் இருந்து பைபாஸ் சாலையில் ஆறுமுகநேரிக்கு வந்துள்ளனர். காரை லட்சுமணன் ஓட்டியுள்ளார். முன் பகுதியில் வினோத் கண்ணனும், பின் இருக்கையில் சுதாகரும் அமர்ந்துள்ளனர். பைபாஸ் சாலையில் உள்ள டீக்கடை வாசலில் நின்றிருந்த பைக்கை தட்டி விட்டு காரை நிறுத்தாமல் சென்றுள்ளனர்.
இதையடுத்து டீக்கடையில் நின்றிருந்த சிலர், பைக்கில் காரை தூரத்தினர். கார் நிற்காமல் தறிகெட்டு அதிவேகத்தில் சென்றுள்ளது. ஆறுமுகநேரி கடலோர காவல் செக்போஸ்டை கடந்து குரும்பூர் செல்லும் வழியாக சென்றபோது எதிரே பயணிகளுடன் வந்த டூரிஸ்ட் வேன் மீது கார் வலதுபுறம் ஏறிச் சென்று மோதியது. இதில் காரின் முன் இடதுபுறம் இருக்கையில் இருந்த வினோத் கண்ணன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மேலும் காரில் இருந்த லட்சுமணன், சுதாகர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் ரென்னிஸ் தலைமையிலான போலீசார் சென்று விபத்தில் படுகாயமடைந்த லட்சுமணன், சுதாகரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் பலியான வினோத் கண்ணன் உடலை போலீசார் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுற்றுலா வேன் டிரைவர் ஆத்தூர் அருகே தலைவன்வடலி கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் மகேஷ் (35) லேசான காயங்களுடன் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காமிரா காட்சிகள் வைரலாகி வருகிறது.



