மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளதால் திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு செய்ய முடியாத நிலை: தணிக்கை செய்ய ஆளில்லாததால் தகுதிச்சான்று இன்றி ஓடும் பள்ளி வாகனங்கள்
திருச்செந்தூர், ஆக. 7: திருச்செந்தூர் கோயில் நகரில் 4 தாலுகாக்களை உள்ளடக்கிய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் ஓட்டுநர் உரிமம் பெற முடியாமலும், வாகன எண் பதிவு செய்ய முடியாமலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் கட்டுப்பாடின்றி ஓடும் நிலை உள்ளது. மேலும் பள்ளி வாகனங்கள் கூட தகுதிச்சான்று பெற முடியாமல் ஓடுவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வாகன பயன்பாடு அதிகரித்ததன் அடிப்படையில் தொழில் வளம் மிக்க துறைமுக நகரமான தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூர் ஆகிய 3 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2000ம் ஆண்டு முதல் திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் பகுதி அலுவலகமாக இருந்து, 2009ல் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் அருகில் தனி கட்டிடத்தில் செயல்பட தொடங்கி 2016ம் ஆண்டு முதல் TN 92 என்ற தமிழ்நாடு மோட்டார் வாகன பதிவுடன் செயல்பட்டு வருகிறது.
திருச்செந்தூர், சாத்தான்குளம், ஏரல் மற்றும் வைகுண்டம் ஆகிய 4 தாலுகாக்களை உள்ளடக்கி செயல்பட்டு வரும் திருச்செந்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் நாள் ஒன்றுக்கு 100க்கும் மேற்பட்ட ஓட்டுநர் மற்றும் பழகுநர் உரிமம் வழங்குதல் மற்றும் வாகன பதிவுகள் நடைபெறும். எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் இந்த அலுவலகத்தில் கடந்த மே மாதம் முதல் 3 மாதத்திற்கும் மேலாக மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஓட்டுநர் உரிமம் பெற முடியாமலும், கட்டுமான பணிக்காக பயன்படும் சரக்கு வாகனம் பதிவு செய்ய முடியாமலும் தவிக்கின்றனர். மேலும் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடத்துக்கு நெல்லை, தூத்துக்குடி, சங்கரன்கோவில் உள்ளிட்ட ஊர்களில் இருந்து அவசரப் பணிக்காக தற்காலிகமாக ஆய்வாளர்கள் அனுப்பப்பட்டாலும் அவர்களும் பணிச்சுமை காரணமாக வாரத்திற்கு ஒரு நாள் வருவதே பெரும்பாடாக உள்ளது.
திருச்செந்தூர் கோயில் நகரம் என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் சொந்த வாகனங்கள் மற்றும் சுற்றுலா கார், வேன் மற்றும் பேருந்துகளில் வந்து செல்கின்றனர். பக்தர்கள் வசதிக்காக 300க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகின்றன. சுற்றுவட்டாரத்தில் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்களும் 4 தாலுகாக்களில் சுமார் 80க்கும் மேற்பட்டவை இயக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் தகுதிச் சான்று பெறுவதற்கு திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியில் இல்லாததால் காலாவதியாகி ஓடும் நிலையில் உள்ளது. இருசக்கர, 4 சக்கர வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம் இல்லாமலே புதிய வாகனங்களுடன் சாலையில் வலம் வருகின்றனர். எனவே வாகனங்களை முறையாக கண்காணித்து விபத்தில்லா பயணம் மேற்கொள்ளும் வகையிலும், வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமத்தை விரைந்து பெறவும் சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள், காலியாக உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
இன்று போய் நாளை வா...!
திருச்செந்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகன பதிவு எண் பெறுவதற்கும், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் தினந்தோறும் ஏராளமானோர் வந்து இன்று வேலை முடிந்து விடுமா? என வெறிச்சோடி கிடக்கும் அலுவலகத்தை பார்க்கின்றனர். இவர்களிடம் போக்குவரத்து அலுவலக ஊழியர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் வரவில்லை. எனவே இன்று போய் நாளை வா எனக் கூறுவது தொடர்கதை ஆகிவிட்டது.



