நாசரேத், செப். 5: நாசரேத்தில் வரும் 9ம் தேதி தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல பேராயர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிஎஸ்ஐ தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலம் கடந்த 2003ம் ஆண்டு அக்.25ம் தேதி புதிதாக உதயமானது. அதன் பிறகு 2006ம் ஆண்டில் நடந்த தேர்தலில் முதல் பேராயராக ஜெபச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2017ம் ஆண்டு நடந்த தேர்தலில் 2வது பேராயராக தேவசகாயம் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2022ம் ஆண்டு முதல் இதுவரை தூத்துக்குடி -நாசரேத் திருமண்டலத்திற்கு பேராயர் இல்லாமல் பொறுப்பு பேராயரை நியமித்து பிரதம பேராயரின் நேரடி கண்காணிப்பில் திருமண்டலம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தில் காலியாக உள்ள பேராயர் பதவிக்கான தேர்தல், செப்டம்பர் 9ம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு நாசரேத் பரி. யோவான் பேராலயத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாடரேட்டர் கமிஷரி பேராயர் கிறிஸ்டோபர் விஜயன் மேற்பார்வையில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்ட லே செயலரும், தேர்தல் குழுத் தலைவருமான எஸ்.டி.கே.ராஜன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் கிறிஸ்டோபர் செல்வராஜ், மேக்சிங் ஜான். ஜெபச்சந்திரன், அருள்ராஜா, கரோலின், ஞானராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர். இந்த தேர்தலில் குருவானவர்கள், லே பெருமன்ற உறுப்பினர்கள், ஆசிரியர் பிரதிநிதிகள் என சுமார் 456 பேர் வாக்களிக்க உள்ளனர்.
பேராயர் தேர்தலில் எஸ்.டி.கே அணி சார்பில் குருவானவர்கள் டி.ஜி.ஏ.தாமஸ், மோசஸ் ஜெபராஜ், தேவராஜன், நவராஜ் ஆகியோரும், டி.எஸ்.எப் அணி சார்பில் குருவானவர்கள் சாமுவேல் தாமஸ், எட்வின் டேனியல், ஹென்றி ஜீவானந்தம், ராபின்சன் ஆகியோரும், எந்த அணியையும் சாராமல் குருவானவர்கள் மனோகரன், இம்மானுவேல் பொன்னுத்துரை என 10 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் மொத்தம் பதிவாகும் வாக்குகளில் 50 சதவீதத்திற்கு மேலாக வாக்கு பெற்றவர்கள் பேராயர் தேர்வு பட்டியலில் இடம்பெறுவர். இதில் இருந்து ஒரு குருவானவரை பேராயராக சினாடு தேர்வு செய்து அறிவிக்கிறது.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பேராயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் ஒவ்வொரு பெருமன்ற உறுப்பினர்களையும், குருவானவர்களையும் தனித்தனியாக சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.


