திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழா; 5ம் நாளில் குடவருவாயில் தீபாராதனை: நாளை சிவப்பு சாத்தி
திருச்செந்தூர், செப். 5: திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா 5ம் நாளை முன்னிட்டு சுவாமி, அம்மனுக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று வழிபட்டனர். நாளை சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி வீதியுலா நடக்கிறது. கடந்த ஆக.31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆவணித்திருவிழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வருகிறது. 5ம் திருவிழாவை முன்னிட்டு நேற்று (4ம் தேதி) மாலை சிவன் கோயிலில் சுவாமி குமரவிடங்கப்பெருமானும், வள்ளி அம்மனும் சிறப்பு அலங்காரத்துடன் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி, இரவு 7.30 மணியளவில் குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது.
அப்போது எதிர்சேவையாக தங்க சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய ஜெயந்தி நாதருக்கும் தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு வழிபட்டனர். தொடர்ந்து சுவாமி, அம்மன் வீதியுலா நடந்தது. இன்று ஆறாம் திருவிழாவை முன்னிட்டு காலையில் கோ ரதம், இரவில் வெள்ளி ரதம் வீதியுலா நடக்கிறது. நாளை (6ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து 9 மணிக்கு சுவாமி ஆறுமுகப்பெருமான் வெற்றிவேர் சப்பரத்தில் ஏற்ற தரிசனம் அருளி, பிள்ளையன் கட்டளை மண்டபத்தை சப்பரம் சேர்கிறது. அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
செப்.7ம் தேதி காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தி சுவாமி எழுந்தருளி திருவீதி வலம் வந்து மேலக்கோயில் சேர்கிறார். தொடர்ந்து மண்டகப்படி மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்று, மதியம் 12 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதியுலா வந்து திருக்கோயில் சேர்கிறார். செப்.8ம் தேதி 9ம் திருவிழாவை முன்னிட்டு இரவு சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக்கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா நடைபெறும். சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், புதன்கிழமை நடைபெறுகிறது. அன்று காலை 7 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. பிள்ளையார் ரதம், சுவாமி தேர், அம்மன் தேர்கள் திருவீதி வலம் வந்து நிலை சேர்கிறது.
11ம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி, அம்மன் மாலையில் யாதவர் மண்டகப்படியில் அபிஷேகம், அலங்காரமாகி புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி இரவு தெப்பக்குளம் நகரத்தார் மண்டகப்படி மண்டபத்திற்கு வந்து சேர்கின்றனர். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி திருவீதி வலம் வந்து மேலக்கோயில் சேர்கிறார். செப்.11ம் தேதி மாலை சுவாமி மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் வீதியுலா வந்து, வடக்குரதவீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் முதலியார் மண்டபத்திற்கு சேர்கிறார். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி சுவாமி, அம்மன் தனித்தனி மலர் கேடயச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலாவாக திருக்கோயில் சேர்ந்து திருவிழா நிறைவு பெறுகிறது.


