Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

கீழவல்லநாட்டில் செயல்படும் அரசு மாதிரி பள்ளியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு..!

செய்துங்கநல்லூர், நவ. 3: கீழவல்லநாட்டில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி பள்ளியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் விடுதியில் தங்கிப் படிக்கும் 500க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கலெக்டரிடம் 3 முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சிறப்பாக பயிலும் மாணவ-மாணவியரை தேர்வு செய்து, அவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதல் உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகள் வழங்கும் வகையில் அரசு மாதிரி பள்ளி, கீழவல்லநாட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் இப்பள்ளி அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பள்ளியின் வளர்ச்சியில் மாவட்ட கலெக்டர்கள் தனிக்கவனம் செலுத்தி, தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தினர். மேலும் மாணவ-மாணவியரை கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் சமீபகாலமாக போதிய மழை இல்லாததால் கீழவல்லநாடு பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் பள்ளி வளாகத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்களுக்கு தேவையான குடிநீரை டிராக்டர் மூலம் தினமும் கொண்டு வந்து மேல்நிலைத் தொட்டியில் ஏற்றி, கடந்த 6 மாதங்களாக விநியோகம் செய்து வருகின்றனர்.

இதனால் பள்ளி நிர்வாகமும், மாணவ-மாணவியரும் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகி வருகின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் இதுவரை 3 முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே விடுதியில் தங்கிப் பயிலும் 500க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிக்கு தடையின்றி குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. பள்ளிக்கு அருகே செல்லும்  தாமிரபரணி குடிநீர் குழாய்  நெல்லை-தூத்துக்குடி 4 வழிச்சாலையில்தான் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. வல்லநாட்டில் இருந்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு தாமிரபரணி ஆற்றுநீர் ராட்சத குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குடிநீர் குழாய், கீழவல்லநாட்டில் உள்ள அரசு மாதிரி பள்ளியின் முன்பாகத்தான் செல்கிறது. எனவே இந்த குழாயில் இருந்து பள்ளிக்கு இணைப்பு வழங்கினால் தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.