Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

82 சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் 1000 போலீசார் பாதுகாப்பு

தூத்துக்குடி, ஆக.3: தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத் திருவிழாவையொட்டி 82 சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. சிவபிரசாத் தெரிவித்துள்ளார். அத்துடன் 4 டிரோன்களை கொண்டு வான் வழியாக கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உலக அளவில் பிரசித்திபெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா ஆண்டுதோறும் 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இதன்படி 444வது ஆண்டு திருவிழா கடந்த ஜூலை 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் முதல்நாளன்று மட்டும் 660 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தனித்துவமிக்க இத்திருவிழா வருகிற ஆக.5ம் தேதி வரை நடக்கிறது. இதில் பெருந்திரளாகப் பங்கேற்கும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

திருவிழா நாட்களில் தினமும் சுமார் 150 போலீசார் பாதுகாப்பு, கூட்ட நெரிசல் கட்டுப்பாடு, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தை பொறுத்தவரை ஆக.3,4,5 ஆகிய தேதிகளில் நடைபெறும் 9,10,11 ஆகிய திருவிழாக்கள் முக்கியமானதாகும். இந்த மூன்று நாட்களும் வெளியூர் மற்றும் வெளிமாநில, வெளிநாடு வாழ் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பது வழக்கம். இந்த மூன்று நாட்களில் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும், தினமும் 50 ஆண் மற்றும் பெண் போலீசார் சீருடை அணியாமல் பொதுமக்களுடன் கலந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இறுதி மூன்று நாட்களில் இந்த எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், முக்கிய இடங்களில் 82 தற்காலிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 6 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 4 ட்ரோன் கேமராக்கள் மூலம் வான்வழி கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது. இதனுடன், சிறப்பு காவல் குழுவும் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், அவசரகால உதவி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் போலீசாரின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஒத்துழைக்குமாறும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது உரிமையாளர் இல்லாமல் கிடக்கும் பொருட்கள் குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் திருவிழாவின் அமைதியையும் பாதுகாப்பையும் பாதிக்கும் வகையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் அல்லது திருவிழாவை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் எஸ்.பி. சிவபிரசாத் எச்சரித்துள்ளார்.