Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்செந்தூர் - தூத்துக்குடி இடையே ஓடக்கரையில் அமைச்சர் உத்தரவிட்டும் நிற்காமல் செல்லும் அரசு பஸ்கள்

ஆறுமுகநேரி, ஜூலை 3: திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் அரசு பஸ்கள், அமைச்சர் உத்தரவிட்டும் ஓடக்கரையில் நிற்காததால் பெண்கள் ஆவேசமடைந்து கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு வீடியோ அனுப்புவோம் எனக்கூறி செல்போனில் வீடியோ எடுத்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே உள்ளது ஓடக்கரை. இங்குள்ள பேருந்து நிறுத்தத்தை கனிமொழி எம்பி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஆகியோர் கடந்த ஜூன் 25ம் தேதி திறந்து வைத்தனர். அப்போது பெண்கள், இங்கு எந்த பேருந்தும் நிற்கவில்லை என கூறினர். இந்த வீடியோ ஊடகங்களில் வைரலான நிலையில், மறுநாள் மீன்வளம்- மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், ஓடக்கரை பேருந்து நிறுத்தத்தில் ஆய்வு செய்தார்.

பின்னர் மக்களிடம் குறைகளை கேட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அனைத்து பஸ்களும் இந்த நிறுத்தத்தில் நின்று செல்லும் என உறுதியளித்தார். மேலும் மதுரையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ்சை நிறுத்தி அதில் ஏறி டிக்கெட் எடுத்து பயணம் செய்தார். வீரபாண்டியபட்டினம் வரை பயணம் செய்யும்போது அனைத்து பஸ்களும் இந்த நிறுத்தத்தில் நின்று செல்லும் எனவும் அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஓடக்கரை பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலர் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் இரவு 9 மணியளவில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது தூத்துக்குடி நோக்கி செல்லும் பஸ்சில் ஏறி ஓடக்கரைக்கு டிக்கெட் கேட்டனர். அதற்கு கண்டக்டர், ஓடக்கரையில் நிற்காது, காயல்பட்டினத்தில் தான் நிற்கும் என கூறினார்.

உடனே பெண்கள், அமைச்சர் எங்கள் பகுதிக்கு வந்தபோது ஓடக்கரையில் பஸ் நிற்கும்னு சொல்லிருக்காரு... உங்களுக்கு தெரியுமா? எனக் கேட்க அதற்கு கண்டக்டர் அதெல்லாம் தெரியாது என கூறியுள்ளார். உடனே அங்கிருந்த பெண்கள் செல்போனில் வீடியோ எடுத்து நாங்கள் 7 பெண்கள் இருக்கிறோம். இரவு 9.30 மணி ஆகிவிட்டது. ஓடக்கரையில் நிறுத்தவில்லை என்றால் இந்த வீடியோவை அமைச்சருக்கு அனுப்புவோம் என கூறினர். மேலும் அவர்கள், அமைச்சர் ஆய்வுக்கு பின் ஒருநாள் மட்டுமே ஓடக்கரையில் பஸ்கள் நின்றது. அடுத்த நாளில் இருந்து பஸ்கள் நிற்கவில்லை. அதைப்பற்றி கேட்கவும் இல்லை, யாரும் கேர் பண்ணவும் இல்லை என வேதனை தெரிவித்தனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அமைச்சர் ஸ்ரீநாத், ஓடக்கரை பேருந்து நிறுத்தத்தை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு சொல்லியும் ஓடக்கரையில் பஸ்கள் நிற்காது என்பது அதிகாரிகளின் மெத்தனப் போக்கை காட்டுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.