Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

திருவிக நகர் மண்டலத்தில் திட்ட பணிகளை மேயர் பிரியா ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு

சென்னை: திருவிக நகர் மண்டலம், 74வது வார்டுக்குட்பட்ட மங்களபுரம், கிருஷ்ணதாஸ் பிரதான சாலையில் உள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நூலகம், சுப்புராயன் தெருவில் உள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நூலகத்தின் செயல்பாடுகளை மேயர் பிரியா நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டு, படைப்பகத்தில் படித்து வருபவர்களிடம் கலந்துரையாடி தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அவர்களின் கோரிக்கையின்படி படைப்பகத்தை பயன்படுத்தும் நேரத்தை அதிகரித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதை தொடர்ந்து, குளக்கரை சாலையில் ரூ.2.13 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் 2 தளங்களுடன் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடித்திட அறிவுறுத்தினார். பின்னர், சந்திரயோகி சமாதி சாலையில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் தண்ணீர் வசதி, சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, கூடுதலான குடிநீர் வசதி ஏற்படுத்திட சென்னை குடிநீர் வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், இப்பகுதியில் உள்ள குழந்தைகள் மையத்தை பார்வையிட்டு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ச்சியாக, ஜமாலியா நகரில் ரூ.9.46 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் 2 தளங்களுடன் கூடிய வணிக வளாகம் கட்டிட பணி மற்றும் பாஷ்யம் முதல் தெருவில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மைய கட்டிடம், ரூ.1.73 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பிக்கிள்பால் விளையாட்டுத் திடல் மற்றும் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மகளிர் உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு, பணிகள் அனைத்தும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின் போது, மண்டல அலுவலர் சொக்கலிங்கம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.