திருத்துறைப்பூண்டி,ஆக.28: திருத்துறைப்பூண்டி அருகே சேதமடைந்துள்ள சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஆலிவலம் காவல் நிலையப் பகுதியில் இருந்து ஆலத்தம்பாடி வடக்கு தெரு வரைசெல்லும் சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த சாலை பல இடங்களில் சேதமடைந்து, கப்பி கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக காணப்படுகின்றன.
இதனால் இச்சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை நேரில் ஆய்வு செய்து, சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சீரமைத்து, சாலையை புதுப்பித்துத் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


