திருவாரூர், செப். 18: திருவாரூர் மாவட்டத்தில் 2019 முதல் 2024ம் ஆண்டுகளில் மேல்நிலை வகுப்பில் தனித்தேர்வர்களாக தேர்வெழுதி இதுவரையில் மதிப்பெண் சான்றிதழ்கள் பெறாதவர்கள் உரிய ஆதரங்களுடன் பெற்றுகொள்ளுமாறு கலெக்டர் மோகனசந்திரன் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மார்ச் 2019 முதல் ஜூலை 2024ம் ஆண்டுகளில் தனித்தேர்வர்களாக தேர்வெழுதி தேர்வு மையங்களுக்கு சென்று மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளாத (உரிமை கோரப்படாத) தனித்தேர்வர்களின் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மதிப்பெண் சான்றிதழ்களை அழிக்கும் பொருட்டு அரசிதழில் அறிவிக்கை வெளிவிட அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே மேற்கண்ட ஆண்டுகளில் தேர்வெழுதி தேர்வுமையங்களுக்கு சென்று மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளாத தனித்தேர்வர்கள் உரிய ஆதாரங்களுடன் திருவாரூர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 30ம்தேதி வரையில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளுமாறு இத்தகவலை மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.


