முத்துப்பேட்டை, அக்.17: முத்துப்பேட்டை நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் பன்றிகளை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைகளின் சார்பாக மாவட்ட துணைச் செயலாளர் நைனா முகம்மது தலைமையில் நிர்வாகிகள் நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினர்.
அந்த மனுவில், முத்துப்பேட்டை நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் அனைத்து பகுதிகளிலும் பன்றிகள் அதிக அளவில் சுற்றித் திரிகிறது. இதனால் தொற்று நோய், காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. ஆகையால் உடனடியாக நகரில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். மாவட்ட துணைத் தலைவர் அப்துர் ரஹ்மான், நிர்வாகிகள் அப்துல் சமது, சாகுல் ஹமீது உடனிருந்தனர்.


