திருவாரூர், செப். 9: திருவாரூர் அருகே அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்து நேற்று திருவாரூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றது. அப்போது திருவாரூர் அருகே திருநெய்பேர் என்ற இடத்தில் அந்த பேருந்து சென்றுகொண்டிருந்த போது பின்னால் வேதாரண்யத்திலிருந்து திருவாரூர் நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று அதிவேகமாக அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது திடீரென அந்த தனியார் பேருந்தானது அரசுப் பேருந்தின் பின்பகுதியில் மோதியது. இதில் ஒருசில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் தனியார் பேருந்து ஓட்டுனருக்கும், அரசு பேருந்து ஓட்டுனர் இடையே கடும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து கிராம மக்கள் சமரசம் செய்ததை தொடர்ந்து 2 பேருந்துகளும் புறப்பட்டு சென்றன. காலை நேரங்களில் தனியார் மற்றும் அரசு பேருந்துகளிடையே போட்டி காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் உடனடியாக போக்குவரத்துதுறை தனியார் பேருந்துகளை வேகமாக செல்வதை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


