திருவாரூர் மாவட்டத்தில் பனை விதை சேகரிப்பு பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருத்துறைப்பூண்டி, செப்.9: திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், தேசிய பசுமைப்படை, பாலம் தொண்டு நிறுவனம் சார்பில் 2025 -26ம் ஆண்டில் ஒரு லட்சம் பனை விதை நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. அதன் தொடக்க நிகழ்வாக திருவாரூர் கலெக்டர் மோகனசந்திரன் பனை விதைகளை பார்வையிட்டு சேகரிப்பு பணியை தொடங்கி வைத்தார். இப்பணி குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் நடனம், பாலம் செந்தில்குமார் ஆகியோர் கூறும்போது, பனை நடவு பணியானது 2019-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.
இதுவரை 1,26,232 பனைவிதைகள் விதைக்கப்பட்டுள்ளது. அவைகள் நன்றாக வளர்ந்து நான்கு அடி உயரம் வரை வளர்ந்துள்ளது. பல்வேறு சிறப்புகளை கொண்ட தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததிகளுக்கு விட்டு செல்லும் வகையில் நீர், நிலம், காற்று மாசுபடுவதை காக்கவும் இப்பணி நடைபெறுகிறது. இப்பணியில் தன்னார்வலர்களை மட்டுமே பயன்படுத்தி இப்பணி செய்யப்படும். அடுத்த வாரம் நடவு பணி தொடங்கும். இதில் அனைத்து அரசுத் துறைகள், தன்னார்வ அமைப்புகள் ஈடுபடுத்தப்படும் என்றனர்.