வலங்கைமான், ஆக. 7: வலங்கைமான் அடுத்த தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போக்குவரத்து சிக்னல்களை மதிக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. வலங்கைமான் ஒன்றியம், தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில், சர்வதேச போக்குவரத்து சிக்னல் தினத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு, சாலை பாதுகாப்பு மன்றம் சார்பில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வெற்றிவேலன் தலைமை வகித்தார். சாலையில் இடதுபுறம் நடந்து செல்வது, ஒருவர் பின் ஒருவராக நடந்து செல்வது, ஒருவழிப் பாதையில் எதிர் திசையில் செல்லாமல் இருப்பது, நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் குறுக்கே வரும் போது கவனமாக தடுமாறாமல் இருப்பது, போக்குவரத்து சிக்னல்களை மதிப்பது ஆகியவை குறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சூரியகுமார், ரேணுகா விஜயகுமாரி, இளையராஜா ராமமூர்த்தி, சுதா அலுவலக உதவியாளர் சுவாமிநாதன் உட்பட மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



