நீடாமங்கலம், ஆக. 5: நீடாமங்கலம் அருகே ஆதனூரில் இருந்து கோவில் வெண்ணி பைபாஸில் ஏறும் இடத்தில் விபத்து ஏற்படாமல் இருக்க வேகத்தடை அமைக்கவேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர். தஞ்சாவூரில் இருந்து அம்மாபேட்டை, கோவில்வெண்ணி வழியாக திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி வரை பைபாஸ் சாலை செல்கிறது. இந்த சாலையில் ஏராளமான கனரக வாகனங்கள், பேருந்துகள், கார், லாரி, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதியில் இருந்து சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு தினந்தோறும் சென்றுவருகின்றன.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்திலிருந்து ஆதனூர் வழியாக கோவில்வெண்ணி தனியார் பொறியியல் கல்லூரி அருகே, திருவாரூர் மாவட்ட எல்லை செக்போஸ்ட் அருகில் இந்த சாலை பைபாஸ் சாலையில் இணைகிறது. அப்போது நீடாமங்கலத்தில் இருந்து ஆதனூர் வழியாக செல்லும் பேருந்துகள், வாகனங்கள் இந்த சாலையில் சென்று கோயில் வெண்ணி பைபாஸில் ஏறும் பொழுது அதிவேகமாக பைபாஸில் வரக்கூடிய வாகனங்கள் சில விபத்துகளை ஏற்படுத்தி செல்கிறது. பல்வேறு விபத்துகள் நடந்த நிலையில் பைபாஸ் ஏறும் இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


