திருத்துறைப்பூண்டி, நவ. 4: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகா சித்தமல்லி ஊராட்சியில் நீர்நிலைகளைப் பாதுகாக்கவும், பசுமையை மேம்படுத்தவும் தீவிர பனை விதை நடும் பணி நடைபெற்றது. சித்தமல்லி கோவில் தெருவில் அமைந்துள்ள புதுக்குளம் கரையில், டெல்டா பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் டி.வி.எஸ். அண்ணாதுரை ஏற்பாட்டில் 1,000 பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்குத் தமிழ்நாடு அரசின் முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.கே.எஸ்.விஜயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, குளக்கரையில் பனை விதைகளை நட்டு இப்பணியைத் தொடங்கி வைத்தார்.
நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாப்பதிலும், குளக்கரைகளைப் பலப்படுத்துவதிலும் பனை மரங்களின் பங்கு மகத்தானது என்பதை உணர்த்தும் வகையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், பெண்களும், விவசாயப் பெருமக்களும் ஆர்வத்துடன் திரளாகக் கலந்துகொண்டு குளத்தின் கரைகள் முழுவதும் பனை விதைகளை நட்டனர்.


