திருத்துறைப்பூண்டி, நவ. 4: தமிழகத்தில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி தெற்கு, வடக்கு, நகர குழுக்களின் சார்பில் காமராஜர் சிலை அருகே, நகர செயலாளர் கோபு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர்கள் காரல் மார்க்ஸ், எம்.முருகதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் நாகராஜன் கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகானந்தம் ரகுராமன், மாவட்ட குழு உறுப்பினர்கள் சாமிநாதன், முத்துக்குமாரசாமி, நகர்மன்றத் துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட ஒன்றிய நகர குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மளிகை பொருட்கள் காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க வேண்டும், ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் தட்டுப்பாடின்றி தரமாக வழங்கிட வேண்டும், முன்பே வர்த்தகத்தின் மூலம் பொருட்களை பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


