வலங்கைமான், ஜூலை 24: பயிர் நோயை வேப்பம் புண்ணாக்கு மற்றும் வேப்ப எண்ணெய்யை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்என வலங்கைமான் வேளாண்மை துறையினர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; வலங்கைமான் வட்டாரத்தில் சுமார் 15 ஆயிரம் ஹெக்டேரில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது பயிர்களில் தோன்றும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த ரசாயன பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சை கொல்லி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் எஞ்சிய நஞ்சு விளைப் பொருள்களில் தங்கி நமது உடலில் பல்வேறு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது.
இவ்வாறு தீங்கு விளைவிக்கும் ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் மாறாக இயற்கையில் கிடைக்கும் தாவரங்களை பயன்படுத்தி பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த முடியும். அவற்றுள் மிக முக்கியமானது வேப்பமரம். வேம்பிலிருந்து கிடைக்கும் இலை, தழை, வேப்பங் கொட்டை, வேப்ப எண்ணெய், வேப்பம் புண்ணாக்கு முதலியவற்றை பயிர் பாதுகாப்பில் நமது முன்னோர்கள் பயன்படுத்தினார்கள். நவீன காலங்களில் விரைவாக பூச்சி மற்றும் நோயினை கட்டுப்படுத்த நாம் இயற்கையில் கிடைக்கும் பூச்சி விரட்டிகளை பயன்படுத்த மறந்து செயற்கை ரசாயன பூச்சி மற்றும் பூஞ்சைக் கொல்லிகளை பயன்படுத்தி வருகிறோம்.
விவசாயத்தில் வேம்பு பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு வேளாண்மை துறை மூலம் 50 சதவீத மானியத்தில் வேப்பம் புண்ணாக்கை விநியோகித்து வருகிறது. வேப்பம் புண்ணாக்கு நெல் வயலுக்கு இடுவதால் பழுப்பு இலை புள்ளி நோய் குறையும். குலை நோய், இலையுறை கருகல் நோய் ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது. வேப்ப எண்ணெய் 3 சதம் மற்றும் வேப்பங்கொட்டை சாறு 5 சதம் கலந்த கரைசலை தெளிப்பதால் நெல் துங்ரோ வைரஸ் நோயை பரப்பும் பச்சை அந்துப்பூச்சிகளின் எண்ணிக்கை குறைகின்றது. வேப்பம் புண்ணாக்கை இலைகளின் மீது தெளிப்பதால் எலுமிச்சையில் தோன்றும் பாக்டீரியா சொறி நோய் கட்டுப்படுத்தப்படுகின்றது.
வெற்றிலையில் தோன்றும் வாடல் நோயினை கட்டுப்படுத்த கொடி இறக்கி கட்டிய 15, 55 மற்றும் 100வது நாட்களில் வேப்பம் புண்ணாக்கை இடுவது நல்லது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.