மன்னார்குடி, செப். 30: குடிநீர், தடையற்ற மின்சாரம் கேட்டு கூத்தாநல்லூர் - கோட்டூர் சாலையில் கொத்தங்குடியில் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொத்தங்குடியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு குடிநீர் தேவைக்காக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொத்தங்குடியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கிராம மக்களுக்கு குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டது. 3 நாட்களாக தண்ணீரின்றி மக்கள் அவதிக்குள்ளாகினர்.இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லாததால் ஆத்திரமடைந்த கிராம பெண்கள் காலி குடங்களுடன் நேற்று கூத்தாநல்லூர் - கோட்டூர் சாலையில் கொத்தங்குடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


