வாக்குச்சாவடிகளை மறு சீரமைத்தல் தொடர்பாக; அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலெக்டர் கலந்தாய்வு கூட்டம்!!
திருவாரூர், அக்.28: திருவாரூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளை திருத்தியமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் பணிகளுக்கான நடவடிக்கைகளை விரைந்து முடித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் மோகனசந்திரன் உத்தரவிட்டுள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி திருவாரூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் சீரமைப்பது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுகூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மோகனச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது: 01.01.2027யை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளை திருத்தியமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் பணிகளை அடுத்த மாதம் (நவம்பர்) 2ந் தேதிக்குள் நிறைவு செய்து ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் 12ந் தேதி வெளியிடப்படுகிறது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள ஆயிரத்து 272 வாக்குச்சாவடிகளில் ஆயிரத்து 200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை, இரண்டு வாக்குச்சாவடிகளாக பிரித்தல், வாக்காளர் இருப்பிடத்திலிருந்து, வாக்குச்சாவடி 2-கி.மீ-க்கு மேல் தூரமுள்ள வாக்குச்சாவடியை பிரித்தல், பழுதடைந்த வாக்குச்சாவடி கட்டிடங்களுக்கு பதிலாக அருகிலுள்ள அனைத்து அடிப்படை வசதிகள் கொண்ட புதிதாக கட்டப்பட்டுள்ள அரசுப்பள்ளி, தனியார் பள்ளி கட்டிடம் அல்லது அரசு கட்டிடங்களை தேர்வு செய்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரிடம் ஒப்புதலுடன் வாக்குச்சாவடிகளின் கட்டிடம், பெயர் மாற்றம் ஏதுமிருப்பின் திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் வாக்குச்சாவடிகளிலுள்ள பழுதுகள் நீக்கம் செய்ய உரிய நடவடிக்கைகள் விரைந்து முடித்திட அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் டி.ஆர்.ஒ கலைவாணி மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


