நீடாமங்கலம், அக்.28: நீடாமங்கலத்தில் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியவரின் இரு சக்கர வாகனத்தை திருடிச்சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து வாகனத்தை கைப்பற்றினர். சென்னை அம்பத்தூர் அய்யம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாண்டில்யன் (26). இவர் சென்னையிலிருந்து நீடாமங்கலத்திற்கு ரயிலில் வந்து வடசேரியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்றுமுன்தினம் சென்னையிலிருந்து ரயிலில் வந்த சாண்டில்யனுக்கும், நீடாமங்கலம் அருகேயுள்ள அனுமந்தபுரம் கிராமத்தைச்சேர்ந்த ராஜராஜன் (50) என்பவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் ரயில் நிலையம் அருகேயுள்ள எடைமேடை பகுதியில் மது அருந்தியுள்ளனர். பின்னர் சாண்டில்யன் ராஜராஜனின் இருசக்கர மோட்டார் வாகனத்தை எடுத்துச்சென்று விட்டாராம். இதற்கிடையே சாண்டில்யனை ராஜராஜன் செல்போனில் போட்டோ எடுத்துள்ளார். சம்பவம் தொடர்பாக ராஜராஜன் நீடாமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் நீடாமங்கலம் போலீசார் வடசேரி சென்று சாண்டில்யனை பிடித்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த நீடாமங்கலம் போலீசார் சாண்டில்யனை கைது செய்தனர். அவரிடமிருந்து இருசக்கர மோட்டார் வாகனத்தையும் கைப்பற்றினர்.


