Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

யுபிஐ பரிவர்த்தனை எம்டிஆர் கட்டணத்தில் இருந்து மருந்து வணிகர்களுக்கு முழுவிலக்கு அளிக்க வேண்டும்

மன்னார்குடி, செப்.28: யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மத்திய அரசு விதிக்க உத்தேசித்துள்ள எம்டிஆர் கட்டணத்தில் இருந்து மருந்து வணிகர்களுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் என்று மன்னார்குடியில் நடந்த திருவாரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க பொதுக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க பொதுக் குழு கூட்டம் மன்னார்குடியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் லெட்சுமணன் தலைமை வகித்தார். மாவட்ட ஆலோசகர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். செயலாளர் சிற்றரசு வரவேற்றார்.

டிஎஸ்பி மணிவண்ணன், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்குமார், பாண்டிச்சேரி விநாயகா மிஷன்ஸ் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர் செல்வம், டவுன் இன்ஸ்பெக்டர் கண்ணன் வாழ்த்துரை வழங்கினர். இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில செயலாளர் அசோக் கலந்து கொண்டு தீர்மானங்களை விளக்கி பேசினார். கூட்டத்தில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மத்திய அரசு விதிக்க உத்தேசித்துள்ள எம்டிஆர் கட்டணத்தில் இருந்து மருந்து வணிகர்களுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும். மருந்து கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதை கட்டாய மாக்கும் சட்டத்தை கைவிட வேண்டும்.

நாடு முழுவதும் 13 லட்சம் மருந்து வணிகர்களை வஞ்சிக்கும் ஆன்லைன் மருந்து வணிகத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும். மருந்து வணிகர்கள் புதிய வங்கி கணக்கு தொடங்க மருந்து விற்பனை உரிமத்தையே ஆவணமாக வங்கிகள் ஏற்று கொள்ள வேண்டும். மருந்துகளுக்கு தற்போது 5% ஜிஎஸ்டி விதிக்கப் படும் நிலையில், காம்போசிசன் ஸ்கீமில் வரி செலுத்து வோர் 3 மாத விற்றுமுதலுக்கு 0.5% வரி செலுத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். மருந்து பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் உள்பட மருத்துவ தேவைக்காக அல்லாமல் தயாரிக்கப்படும் பொருட்கள் மருந்துகளாகவே கருதப்பட்டு மருந்து கட்டுப்பாட்டு துறையின் உரிமம் பெற்றே தயாரித்து விற்பனை செய்யப்பட வேண்டும்.

ஒரே மருந்தை பல நிறுவனங்கள் தயாரிக்க அரசு அனுமதிப்பதால் அனைத்து மருந்துகளின் தரத்தையும் அகில இந்திய அளவில் பரிசோதனை செய்வது மருந்து கட்டுப்பாட்டு துறையின் கடமை நுகர்வோர் தாங்கள் வாங்கும் சக்திக்கு ஏற்ப தரமான நிறுவன மருந்துகளை வாங்க அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் தற்போது பின்பற்றும் விலை நிர்ணய முறையை மாற்றி உற்பத்தி செலவின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இதனையே நாடாளுமன்ற நிலைக் குழுவும் பரிந்துரைத்து உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தரமற்ற மருந்துகள் என அறிவிக்கப்படும் போது அதற்கு சில்லறை வணிகர்கள் பொறுப்பாக்கப் படக்கூடாது, உற்பத்தியாளரே முழு பொறுப்பேற்று திரும்ப பெற வேண்டும் என சட்ட திருத்த கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. முடிவில், பொருளாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.