திருத்துறைப்பூண்டி, செப். 28: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து 28 நாட்கள் கடந்துள்ள நிலையில், திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முள்ளியாற்றில் போதுமான அளவு தண்ணீர் வராததால் நேரடி நெல் விதைப்பு செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னோடி விவசாயி வடபாதி கோவிசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது,
காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்காமல், முள்ளியாற்று பாசனத்தை நம்பி நேரடி நெல் விதைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக பிச்சன்கோட்டகம், கட்டிமேடு, மேலமருதூர், ஆதிரெங்கம், சேசல் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். தற்போது விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் முளைத்து வரும் நிலையில், வயல்களுக்கு தேவையான தண்ணீரை பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து 28 நாட்கள் கடந்தும், முள்ளியாற்றில் போதுமான அளவு தண்ணீர் வராததால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையவில்லை என கூறப்படுகிறது. இதனால் நேரடி நெல் விதைப்பு செய்துள்ள வயல்களில் ஈரப்பதத்தை பராமரிக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, முள்ளியாற்றில் தற்போதுள்ள நீர்வரத்து மற்றும் பாசன நிலவரத்தை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, கடைமடை பகுதிகளான பிச்சன்கோட்டகம், கட்டிமேடு, மேலமருதூர், ஆதிரெங்கம், சேசல் உள்ளிட்ட பகுதிகளுக்கு உரிய அளவு தண்ணீர் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து, முள்ளியாற்றில் பாசனத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவும், நேரடி நெல் விதைப்பு செய்துள்ள விவசாயிகளின் பயிர்களை காப்பாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


