திருவாரூர், செப், 26: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் ரூ ஒரு லட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மோகனசந்திரன் வழங்கினார்.திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் 35 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் கலந்துகொண்ட நிலையில் வீட்டுமனை பட்டா, பாட்டா மாற்றுதல், நில அளவீடுதல், ஓய்வூதியம் உள்ளிட்டவை குறித்த 8 மனுக்கள் பெறப்பட்டது.
மேலும், இக்கூட்டத்தில் 8 பயனாளிகளுக்கு கல்வி உதவிதொகை, திருமண உதவிதொகை உட்பட மொத்தம் ரூ ஒரு லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மோகனசந்திரன் வழங்கினார். கூட்டத்தில் டி.ஆர்.ஒ கலைவாணி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் துர்கா, தாட்கோ பொது மேலாளர் சக்திவேல் கலியபெருமாள், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் விஜயலெட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


