திருத்துறைப்பூண்டி நகராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை வளவன் வடிகாலில் விட திட்டம் விவசாயிகளிடம் கருத்து கேட்பு
திருத்துறைப்பூண்டி, ஆக. 21: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படும் நீரை வளவன் வடிகாலில் விடுவது தொடர்பாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ‘கூட்டத்திற்கு பொதுமக்கள், வளவன் வடிகால் பகுதி பாசன விவசாயிகள், அரசியல் கட்சியினர் மற்றும் நீர்வளத்துறை, வருவாய்துறை, நகராட்சிதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் நோக்கம், சுத்திகரிப்பு நிலையம் செயல்படும் விதம் குறித்து நகராட்சி ஆணையர் கிருத்திகாஜோதி மற்றும் நகராட்சி பொறியாளர் வசந்தன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் தந்தனர். மேலும் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் நீர்வளத்துறை, நகராட்சி துறை, மாசுக்கட்டுப்பாட்டுதுறை இணைந்த குழு ஒன்றை ஏற்படுத்தி இத்திட்டத்தை கண்காணிப்பது என அனைவராலும் முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தை வந்திருந்த விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வரவேற்று பேசினர். இக்கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், துணை தலைவர் ஜெயப்பிரகாஷ், நியமனக்குழு உறுப்பினர் மற்றும் திமுக நகரச்செயலாளர் பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், எழிலரசன், வசந்த், ரவி, அதிமுக நகர செயலாளர் சண்முகசுந்தர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர், மதிமுக மாவட்ட பொருளாளர் கோவி சேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் நேரு, சிபிஎம் நகர செயலாளர் கோபு மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் சங்கத்தினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


