திருத்துறைப்பூண்டி, ஆக. 20: 1, 500 ஏக்கர் சாகுபடி நிலம் பாதிக்கும் தெற்கு ராஜன் வாய்க்கால் ரெகுலேட்டர் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாமணி மற்றும் சேகல் ஊராட்சியில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் சேகல்-தீவம்பாள்பட்டினம் பகுதியில் உள்ள அரசு விதைப் பண்ணையில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த விவசாய நிலங்களுக்கு தேவையான பாசன வசதிகளில் முக்கிய பங்கு வகிப்பது தேசிங்குராஜபுரம் சேகல் கிராம வாசிகள் பயன் அடையும் வகையில் கிராம பாசன எல்லக்குட்ப்பட்ட தெற்கு ராஜன் வாய்க்கால் ஆகும். இந்த வாய்க்காலில் நீர் தேக்கி வைக்கும் பகுதியில் அமைந்துள்ள பாலம் கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. பாலம் சேதமடைந்து பல ஆண்டுகளாகியும் இதுவரை உரிய சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் வாய்க்காலில் தண்ணீரை தேக்கி வைத்து விவசாய நிலங்களுக்கு முறையாக பாசன நீரை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படும் நிலை உள்ளது.
பாமணி மற்றம் சேகல் ஊராட்சியில் மட்டும் சுமார் 1,200 ஏக்கர் விவசாய நிலங்கள் சாகுபடியில் உள்ள நிலையில், நீர்த்தேக்கப்பாலம் சேதமடைந்துள்ளதால் பாசன காலங்களில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அதேபோல் அரசு விதைப் பண்ணையில் உள்ள சுமார் 50 ஏக்கர் சாகுபடி நிலங்களுக்கும் போதிய பாசன நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெற்கு ராஜன் வாய்க்கால் நீர்தேக்கி மற்றும் பாலம் பழுது ஏற்பட்டுள்ளதை நேரில் ஆய்வு செய்து, சேதமடைந்த பகுதிகளை அகற்றி, புதிய பாலம் அமைக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், நீர்த்தேக்கப் பாலத்தை சீரமைத்து, விவசாயிகளுக்கு தடையின்றி பாசன நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


