முத்துப்பேட்டை, ஆக. 19: முத்துப்பேட்டையில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு பகுதியில் குடிநீர் வசதி, சாலை வசதி, கழிவுநீர் வடிகால் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தராத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மனிதநேய மக்கள் கட்சியின் நகர தலைவர் மன்சூர் தலைமை வகித்தார்.
போராட்டத்தில்பேரூராட்சி 5வது வார்டு புளியமரத் தெரு சாலை உடனடியாக சீரமைக்க வேண்டும், திருத்துறைப்பூண்டி சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையை சேதப்படுத்தி இதனால் வரை குழாய் பதிக்காத நிர்வாகத்தை கண்டித்தும் உடனடியாக குடிநீர் குழாய் அமைத்து 3 இடங்களில் வாழ்வு அமைத்து தரவேண்டும். ஆசாத்நகர் ரயில்வே லைன் தெற்கு பகுதியில் குடிநீர் குழாய் அமைத்தும் இதனால் வரை குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், தமிழக அரசையும் கண்டித்தும் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். மேலும் உடனடியாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டுமென கோஷமிட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் 15 தினங்களுக்குள் கோரிக்கைகள் அனைத்தும் சரி செய்து தரப்படும் என்று எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் இந்தப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


