முத்துப்பேட்டை, செப். 17: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் வரும் 20ம்தேதி இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த ஊர்வலத்தில் வழக்கம்போல் ஜாம்புவானோடை, வடக்காடு, உப்பூர், தில்லைவிளாகம், அரமங்காடு, ஆலங்காடு உட்பட 19 பகுதிகளிலிருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்பட்டு நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டு மிக பிரமாண்டமாக நடைபெறும். அதேபோல் இந்த வருடம் கூடுதலாக சுமார் 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்படும். அதனால் போலீசார் சார்பில் முன்னேற்பாடுகள் சில நாட்களாக துவங்கி முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று விநாயகர் ஊர்வல பாதையை மாவட்ட எஸ்பி சதீஷ் குமார், ஊர்வலம் துவங்கும் இடமான ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவில் மற்றும் ஊர்வலம் செல்லும் பாதையான அங்கிருந்து புறப்பட்டு செல்லும் பகுதிகளான கல்லடிக்கொல்லை, ஜாம்புவானோடை தர்கா, சிவராமன் நினைவு ஆர்ச், ஆசாத்நகர் கோரையாறு பாலம், திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பேருந்து நிலையம், கொய்யா முக்கம், பங்களா வாசல், ரஹ்மத் பள்ளி, செம்படவன்காடு மற்றும் சிலைகள் கரைக்கும் முத்துப்பேட்டை அருகே செம்படவன்காடு பாமணி ஆற்றுக்கரை ஆகியவைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். ஆய்வுக்கு பின்னர் முத்துப்பேட்டை போலீசார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆய்வின் போது, டிஎஸ்பி ராஜு, இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் ராகுல் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


