திருவாரூர், செப். 17: திருவாரூர் மாங்குடி அருகே பாண்டவையாற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு மாவட்ட எஸ்பி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். அதன்படி விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் 29 சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 427 சிலைகளுக்கு மட்டும் போலீசார் உரிய அனுமதி வழங்கி உள்ள நிலையில் இதையும் மீறி மொத்தம் 500க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இதில் 10 அடி முதல் 16 அடி வரையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் அடங்கும் என்ற நிலையில் திருவாரூர் நகரில் முடுக்கு தெரு, அய்யனார் கோயில் தெரு, ஊமை காளியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 10 அடி உயரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. மேலும் இந்த விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின் போது எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருப்பதற்காக கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வகையில் ஒரே நாளில் இந்த விநாயகர் ஊர்வலத்தை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு தொடர்ந்து ஒரு வார காலம் வரையில் ஒவ்வொரு ஊராக ஊர்வலம் நடைபெற்று நீர் நிலைகளில் கரைக்கும் பணி நடைபெறும்.
கடந்த 14ம்தேதி கோட்டூர் மற்றும் கூத்தாநல்லு£ர் பகுதியிலும், நேற்று முன்தினம் (15ம்தேதி) குடவாசல் மற்றும் நன்னிலம் பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் ஊர்வலமானது நடைபெற்ற நிலையில் நேற்றிரவு திருவாரூர் நகரில் விநாயகர் சிலைகள் ஊர்வலமானது நடைபெற்றது. இதனையொட்டி மார்க்கெட் ரோடு ஊமை காளியம்மன் கோயிலிருந்து 29 சிலைகளுடன் புறப்பட்ட இந்த ஊர்வலமானது தொடர்ந்து கடைத்தெரு, பனகல் சாலை, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி வழியாக மீண்டும் பனகல் சாலையை அடைந்து நாகை பைபாஸ் சாலை வழியாக திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் மாங்குடி என்ற இடத்தில் செல்லும் பாண்டவையாற்றில் இரவு அனைத்து விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன. மேலும் இந்த விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி மாவட்ட எஸ்பி சதீஷ்குமார் மேற்பார்வையில் நூற்றுகணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
இதேபோன்று திருத்துறைப்பூண்டியில் நாளையும் (18ம்தேதி), மன்னார்குடியில் நாளை மறுதினமும் (19ம்தேதி), முத்துப்பேட்டையில் வரும் 20ம்தேதியும் விநாயகர் சிலைகள் ஊர்வலமானது நடத்துவதற்கு போலீசார் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த விநாயகர் ஊர்வலமானது அமைதியான முறையில் நடைபெறுவதற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அனுமதிக்கப்பட்ட நேரத்தில் விரைவில் ஊர்வலத்தை முடிக்குமாறும் மாவட்ட எஸ்பி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.


