Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

திருவாரூரில் இடி, மின்னலுடன் மிதமான மழை

திருவாரூர், மே 7: திருவாரூரில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தில் நடப்பாண்டில் கோடை வெயில் என்பது கடந்த மார்ச் மாதம் முதல் துவங்கியுள்ளது. இதனையொட்டி சாலைகளில் நடமாடும் பொது மக்கள் குடை பிடித்தவாறு செல்லும் நிலை இருந்து வருகிறது. மேலும் இந்த கோடை காலத்தில் வழக்கமாக அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலும் துவங்கி நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டில் கடந்த 4ந் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் திருச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் வேலூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 முதல் 105 டிகிரி அளவில் வெயில் சுட்டெரித்து வருகிறது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் தினந்தோறும் 98 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வருகிறது.

இதன் காரணமாக பொது மக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் குறிப்பாக கட்டிட தொழிலாளர்கள் உட்பட அனைவரும் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் வெயில் காலத்தின் போது வழக்கத்தை விட கூடுதலான அளவில் மனிதர்கள் உடலில் வெப்பம் அதிகரிப்பதையொட்டி காய்ச்சல், அம்மை, மயக்கம் மற்றும் சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இதிலிருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும் தேவையான அளவுதண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுக்காவிட்டாலும் கூட போதுமானஅளவு தண்ணீர் அருந்த வேண்டும்.

பயணத்தின் போது குடி நீரை எடுத்துச் செல்லவேண்டும். எலுமிச்சை ஜூஸ், இளநீர்,மோர்,புளித்த சோற்று நீர் மற்றும் பழச்சாறுகளை பருகி நீரிழப்பை தவிர்க்க வேண்டும். பருவக்கால பழங்கள்,காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியில் செல்லும் போது கண்ணாடி மற்றும் காலணி அணிந்தும், குடை (கருப்புநிறத்தைதவிர்த்து) எடுத்து செல்ல வேண்டும். மயக்கம் அல்லது உடல் நலக்குறைவினை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும், குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்தி விட்டு வெளியே செல்லக்கூடாது என்பதுடன் தினந்தோறும் குளிர்ந்தநீரில் குளிக்கவைக்க வேண்டும். போதிய இடைவேளைகளில் குழந்தைகள் நீர் அருந்துவதை உறுதி செய்துகொள்ள வேண்டும், கர்ப்பிணிகள் சிரமப்பட்டாவது அடிக்கடி போதிய நீர் குடிக்கவேண்டும்,

வீடுகளில் சமையல் கேஸ் அடுப்புகளையும், விறகு அடுப்புகளையும் பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும் என்பதுடன் பொதுவாக பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரையில் அவசியமின்றி பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்த்துகொள்ள வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதிக வெப்பத்தின் தாக்கம் காரணமாக ஹீட் ஸ்டோக் எனப்படும் வெப்ப வாத நோய் ஏற்படுவதற்கு அறிகுறிகள் இருந்து வருவதால் அதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு தமிழக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை 11 மணி வரையில் மாவட்டத்தில் மாவட்ட தலைநகரான திருவாரூர் உட்பட மாவட்டம் முழுவதும் வழக்கம் போல் வெயில் அடித்த நிலையில் அதன்பின்னர் மேக மூட்டம் ஏற்பட்டு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையாக ஒரு மணி நேரம் வரையில் பெய்தது.

இதன்காரணமாக திருவாரூர் நகர் உட்பட பல்வேறு இடங்களில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் திருத்துறைப்பூண்டியில் மதியம் ஒரு மணி முதல் 2 மணி வரையிலும், கோட்டூர் மற்றும் பெருகவாழ்ந்தான் பகுதிகளில் 2 மணி முதல் 3 மணி வரையிலும் மிதமான மழை பெய்த நிலையில் முத்துப்பேட்டை, மன்னார்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.