திருவாரூர், நவ. 3: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 290 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் கலெக்டர் மோகனசந்திரனிடம் வழங்கினர்.
திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் மோகனசந்திரன் தலைமை வகித்தார். இதில் பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 290 மனுக்களை அளித்தனர்.
பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மேகனசந்திரன், அதனை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அடல் வாயு அப்யுதாய் யோஜனா திட்டத்தின் கீழ் தலைமுறைகளுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் மூத்த குடிமக்களின் கண்ணியமான வாழ்வை மையமாகக் கொண்டு மாவட்ட அளவில் நடத்தபெற்ற உயிருள்ள காட்சி சித்திரம் போட்டிகளில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழினை கலெக்டர் வழங்கினார்.
மேலும் முதலமைச்சர் கோப்பை மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் திருவாரூர் மாவட்டத்தினை சேர்ந்த வெற்றியாளர்களையும் பாராட்டினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ கலைவாணி, நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சிவசுப்ரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் நம்பிராயர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


