Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

40 ஆயிரம் ஏக்கரில் முன்பட்ட குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு தேவையான நேரத்தில் உரம் கிடைக்க ஏற்பாடு

திருவாரூர், ஜூன் 2: திருவாரூர் மாவட்டத்தில் விவசயிகளுக்கு தேவையான நேரத்தில் உரம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் உணவு உற்பத்தியில் டெல்டா மாவட்டங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இதில் குறிப்பாக நெல் உற்பத்தி 90 சதவீத அளவில் நடைபெற்று வருகிறது. இதைமுன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் குறுவை மற்றும் சம்பா என மொத்தம் 5 லட்சம் ஏக்கரில் சாகுபடி பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 2025, 26 காரீப் பருவத்திற்காக 1 லட்சத்து 93 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. கடந்தாண்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரையில் நடைபெற்ற நெல் கொள்முதலில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 727 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதன் பின்னர் 3 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்றது.

தற்போது கடந்த ஜனவரி மாதம் முதல் அறுவடை பணிகள் துவங்கப்பட்டு கொள்முதல் பணிகள் நடைபெற்றது. இதற்காக நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் 540 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதத்துடன் கொள்முதல் பணிகள் முடிவுற்று மொத்தம் 5 லட்சத்து 62 ஆயிரம் மெ.டன் அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டில் கோடை நெல் சாகுபடி கடந்த மார்ச் மாதம் துவங்கி ஏப்ரல் மாதம் 15ம் தேதி வரையில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் நடைபெற்றுள்ளது. மேலும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை வரும் 12ம் தேதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் போர்வெல்கள் வசதியுள்ள இடங்களில் முன்பட்ட குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் முன்பட்ட குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் தனியார் உரக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் 45-க்கும் மேற்பட்ட தனியார் உரக்கடைகளும், 21 தொடக்க வேளாண் கூட்டுறவு நிலையங்களும் உள்ளது. இந்த உரக்கடைகளில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப உரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தற்போது பருத்தி, கோடை நெல், குறுவை நெல் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் உரங்களை வாங்கி பயன் பெற்றுவருகின்றனர்.

மேலும், மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) தலைமையில் குழுக்கள் அமைத்து மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள உரக் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி உரங்கள் சரியான எடையில், அரசு நிர்ணயித்த விலையில் விற்கப்படுகிறதா என்றும், யூரியா போன்ற உரங்கள் பதுக்கிவைத்து விற்கப்படுகிறதா என்றும், இருப்புபட்டியல், விலைப்பட்டியல் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், உரக்கடைகளில் உரங்கள் இருப்பு விபரம், விலைப்பட்டியல் ஆகியவற்றை கடைகளின் முன்புவைக்க வேண்டும். அதைப்போல உரம் வாங்க வரும் விவசாயிகளுக்கு பி.ஓ.எஸ் இயந்திரம் மூலம் ரசீது வழங்க வேண்டும் என்றும் கடை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே கடைகளில் விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு உரங்கள் மற்றும் இணை உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொடர் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால் கடையின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.