Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொதுமக்கள் நலன் கருதி திருவாரூரில் ஷேர் ஆட்டோ சேவை தொடங்கப்படுமா?

திருவாரூர், ஜூன் 2: மாவட்ட தலை நகரான திருவாரூரில் ஆட்டோ கட்டணத்தை குறைக்கும் வகையில் பொதுமக்கள் நலன் கருதி ஷேர் ஆட்டோக்கள் சேவை துவங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 30 வார்டுகளை கொண்ட திருவாரூர் நகராட்சி பகுதியில் கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 58 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். அதன் பின்னர் தற்போது 15 ஆண்டு காலத்தில் மக்கள்தொகை அதிகரித்துள்ள நிலையில் மாவட்டத் தலைநகராக திருவாரூர் இருந்து வருவதால் இங்குள்ள கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் என அரசின் அனைத்து துறை அலுவலகங்கள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி தமிழ்நாடு மத்திய பல்கலைகழகம் போன்றவை இருந்து வருவதன் காரணமாக நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த நகரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் திருவாரூர் நகரத்தில் மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டாலும், நகரின் மையப்பகுதியில் இருந்து புதிய பேருந்து நிலையம் என்பது சுமார் 2 கி.மீட்டர் தொலைவில்வுள்ளதாலும் பழைய பேருந்து நிலையம் அருகில் தான் வணிக நிலையங்கள், ரயில் நிலையம், வங்கிகள், கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள் மற்றும் வழிப்பாட்டு தலங்கள் போன்றவை அமைந்துள்ளதாலும் மக்கள் அதிகஅளவில் பயன்படுத்தும் பேருந்து நிலையமாக பழைய பேருந்து நிலையம் இருந்து வரும் சூழலில் இந்த பழைய மற்றும் புதிய பேருந்து நிலையத்தை இணைப்பதற்கும் உரிய வகையில் வாகன வசதிகள் இல்லாமல் இருந்து வருகிறது.இந்நிலையில் தற்போதைய சூழலில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப நகரங்களும் விரிவாக்கம் பெற்றுக் கொண்டே செல்கிறது. நகர விரிவாக்கம் என்பது காலத்திற்கு ஏற்ற ஒன்று என்றாலும் அதற்கேற்ப போக்குவரத்து வசதியினையும் ஏற்படுத்துபவது அவசியமாக ஒன்றாக இருந்து வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் விஷம் போல் ஏறி வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஆட்டோ ரிக்ஷாக்கள் கட்டணங்கள் என்பது கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் ஆட்டோ பயணம் என்றாலோ பொது மக்களுக்கு ஒருவித ஐய்யம் ஏற்படுவதால் இவற்றிற்கெல்லாம் ஒரே தீர்வு நகரில் ஷேர் ஆட்டோக்களை இயக்குவதுதான் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.அதன்படி மயிலாடுதுறை மார்க்கத்தில் கங்களாஞ்சேரி வரையிலும், நாகப்பட்டினம் மார்கத்தில் கிடாரங்கொண்டான் வரையிலும், திருத்துறைபூண்டி மார்க்கத்தில் புலிவலம் வரையிலும், தஞ்சை மார்க்கத்தில் அம்மையப்பன் வரையிலும், மன்னார்குடி மார்க்கத்தில் தேவர்கண்டநல்லூர் வரையும், ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டால் குறைந்த கட்டணத்தில் நகரத்திற்கு வந்து செல்ல பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.