Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தட்டுப்பாடு நிலவும் காலத்தில் கள்ளச்சந்தையில் வணிக சிலிண்டர் விற்பதை தடுக்க வேண்டும்

திருவாரூர், ஜூன்23: பெட்ரோல் மற்றும் டீசல் கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தட்டுபாடு ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதியதன் காரணமாக பெட்ரோல் பங்குகள் இருக்கும் இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் கூட ஏற்பட்டது. எரி பொருள்களுக்கு தட்டுபாடு ஏற்படாது என்று ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும் தொடர்ந்து 4 நாட்கள் வரையில் இதேபோன்று பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதியது. இதுமட்டுமின்றி எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டதையடுத்து வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக உபயோக சிலிண்டர்களுக்கு கடும் பற்றாகுறை ஏற்பட்டது.

இதன் காரணமாக தமிழ்நாடு உட்பட பெரும்பாலான மாநிலங்களில் ஹோட்டல் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் பெரும்பான்மையான தொழிலாளர்கள் வேலை இழக்கவும் நேரிட்டது. இதனையடுத்து ரூ.2 ஆயிரத்து 400க்கு விற்பனை செய்ய வேண்டிய வணிக பயன்பாடு கியாஸ் கள்ளச்சந்தையில் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையில் கூட விற்பனையாகி வருகிறது. இதனால் சாலையோர கடைகளும், சிறு கடைகளும் பெரும்பாலும் மூடப்பட்டது. மேலும் நிரந்தரமான உணவகங்கள் தங்களுக்கான விலையினை 25 சதவிகிதம் வரையில் உயர்த்தியுள்ளன. இருப்பினும் தற்போது வரையில் வணிக சிலிண்டர் தட்டுபாடு இருந்து வரும் நிலையில் ஹோட்டல்களில் விறகு அடுப்பு, மின் அடுப்பு போன்றவற்றினையும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வணிக சிலிண்டர் தட்டுபாடு காரணமாக கள்ளசந்தையில் இருமடங்கு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதால் வீட்டு உபயோக சிலிண்டரில் இருந்து வரும் எரிவாயுவை வணிக சிலிண்டருக்கு மாறுதல் செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் வீட்டு உபயோக சிலிண்டருக்கு தட்டுபாடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுபோன்று கள்ளசந்தையில் வணிக சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுவதையும், வீட்டு உபயோக சிலிண்டரில் இருந்து வரும் எரிவாயுவை வணிக சிலிண்டருக்கு மாறுதல் செய்து கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படுவதையும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.