Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மன்னார்குடி அருகே அரசு பள்ளியில் கலைத்திருவிழா

மன்னார்குடி, செப். 8: மன்னார்குடி அருகே அரசு பள்ளியில் கலைத்திருவிழா நடந்தது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கருவாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாரதி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் ‘தமிழ்க் கூடல்-2’ சிறப்பு விழா நேற்று நடந்தது. முதுகலை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். முதுகலை ஆசிரியர் ராஜப்பா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். சொற்பொழிவாளர் தினேஷ் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி தமிழ்ப்பேராசிரியர், தமிழியல் செயல்பாட்டாளர் முனைவர் அறிவழகன் கலந்து கொண்டு, \”அற்றம் காக்கும் கருவி\” எனும் தலைப்பில் பேசியதாவது: வாழ்க்கையில் வெற்றியடைவதற்கான வழிகளை பல்வேறு சாதனையாளர்களின் எடுத்துக் காட்டுகளுடன் சுவைபடக் கூறினார். எத்தனை தடைகள் குறுக்கிட்டாலும் சலிப்படையாமல், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளையும் குறிக்கோள்களையும் எட்டிப்பிடிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

மேலும், மாணவர்கள் தங்களின் பலம் மற்றும் பலவீனங்களை சரியாக அடையாளம் கண்டு, தங்களது தனித்துவமான திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். அத்துடன், அரசுப்பள்ளி மாணவர்களின் தனித்துவமான திறமைகள் மற்றும் சிறப்புகளையும் சுட்டிக்காட்டி உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து, பள்ளி தலைமையாசிரியர் கலைச்செல்வன், தமிழ் மொழியின் தொன்மை மற்றும் சிறப்புகளை எடுத்துரைத்தார். மேலும், நமது பண்பாட்டையும் அடையாளத்தையும் பாதுகாப்பதில் தமிழ் பெயர்கள் சூட்டுவதன் முக்கியத்துவத்தை பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் சுட்டிக்காட்டி, குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பது தாய்மொழிக்கு செய்யும் பெருமை என்று கூறினார்.

அத்துடன் விளையாட்டுகள், கலைத்திருவிழாக்கள் போன்ற பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் பெற்ற சாதனைகளையும், பள்ளி சிறந்த செயல்பாடுகளையும் பெருமிதத்துடன் எடுத்துரைத்தார். விழாவின் அங்கமாக, பள்ளி மாணவர்கள் தமிழின் பெருமையை போற்றும் வகையிலான பேச்சுகள், கவிதைகள் மற்றும் பாடல்களை பாடி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். முடிவில் பட்டதாரி ஆசிரியை வானதி நன்றி கூறினார்.