திருத்துறைப்பூண்டி செப் 7: டெல்டா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலையில், கல்லணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரை நம்பி சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கினர். ஆள் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் மணலி அருகே கச்சலாபுரம் பகுதியில் விவசாயி ஒருவர் டிரோன் மூலம் சம்பா நேரடி விதைப்பு பணியை மேற்கொண்டார். தமிழக முதல்வர் கடந்த 1ம்தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார். தொடர்ந்து அந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததையடுத்து, கல்லணையிலிருந்தும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மணலி, குறும்பல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சம்பா நேரடி விதைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மணலி அருகே கச்சலாபுரம் பகுதியில் விவசாயி ஒருவர் வயலில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி டிரோன் மூலம் சம்பா நெல் விதைகளை வயலில் நேரடியாக விதைத்தார். இதுகுறித்து விவசாயி கூறுகையில்: இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், அந்த தண்ணீரை நம்பி சம்பா சாகுபடிக்கான நேரடி விதைப்பு பணிகளை தொடங்கியுள்ளோம்.
தற்போது விவசாய பணிகளுக்கு தேவையான ஆட்கள் கிடைப்பதில் பெரும் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் விவசாய பணிகளை குறைந்த நேரத்தில் மேற்கொள்ளும் வகையில் டிரோன் மூலம் சம்பா நெல் விதைகளை நேரடியாக விதைத்து வருகிறோம். டிரோன் மூலம் விதைப்பு செய்வதால் குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவில் விதைகளை விதைக்க முடிகிறது. மேலும் விதைகள் முளைத்து வரும் நேரத்தில் களையெடுப்பு உள்ளிட்ட பணிகளும் குறையும்’’ என்றார். மேலும், சம்பா சாகுபடி பணிகளை முழுமையாக மேற்கொள்ளும் வகையில் விவசாயிகளுக்கு முறை வைக்காமல் தொடர்ந்து தண்ணீர் வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.


