Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

முத்துப்பேட்டை அருகே சங்கேந்தி கடை தெருவில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

முத்துப்பேட்டை,மே 23: முத்துப்பேட்டை ஒன்றியத்தில் கடந்த இரு மாதங்களாக இப்பகுதியில் உள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் முறையாக குடிநீர் வழங்கப்படாததால் ஒன்றியம் முழுவதும் 29 ஊராட்சிகளிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முத்துப்பேட்டை அடுத்த சங்கேந்தி ஊராட்சி முழுவதும் ஒரு மாதமாக குடிநீர் சரிவர வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த கிராம மக்கள் நேற்று எடையூர் சங்கேந்தி கடை தெருவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா தலைமையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சங்கேந்தி பவுண்டடி பகுதியில் உள்ள குடிநீர் சம்புக்கும், மேல தெருவில் உள்ள குடிநீர் சம்புக்கும், மோட்டார் உடனே பொருத்த வேண்டும். பம்பு ஆப்ரேட்டரை உடன் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். குடிநீர் தட்டுப்பாடு சரி செய்ய ஊராட்சியில் ஆறு இடங்களில் அடிபம்பு அமைத்த தரவேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை டிஎஸ்பி ராஜு, எடையூர் இன்ஸ்பெக்டர் தண்டாயுதபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபு மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் உள்ளிட்டோர் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் கோரிக்கைகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் வாக்குறுதி அளித்தனர். இதனையடுத்து மறியலில் போராட்டம் கைவிட்டு அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.