ரூ.77.89 லட்சத்தில் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது; அறிவுசார் மைய கட்டிடம் திறப்பு விழா காண்பது எப்போது?
வலங்கைமான், ஜூன் 29: வலங்கைமான் பேரூராட்சி ஒன்றாவது வார்டு பகுதியில் திமுக ஆட்சியில், தாட்கோ மூலம் ரூ.77.89 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அறிவுசார் மையம் எப்போது திறக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். தமிழ்நாட்டில் கிராமப்புற மக்களின் அறிவு, தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டிற்காக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.ஒரு கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் நவீன \”கிராம அறிவுசார் மையங்கள்\” திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. இவை டிஜிட்டல் நூலகம், இணைய வசதி, பயிற்சி மற்றும் விவசாயத் தகவல்களை வழங்கும் மையங்களாகச் செயல்படுகின்றன. கிராமப்புறங்களில் டிஜிட்டல் கல்வியறிவு, விவசாய நவீன தொழில்நுட்பங்கள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை ஒரே இடத்தில் பெறுதல் ஆகியவை நோக்கமாகும்.
இந்த மையங்கள் தரைத்தளம், முதல் தளத்துடன் கூடிய மாதிரி (மாதிரி-1) அல்லது தனி தரைத்தள மாதிரி (மாதிரி-2, 3) எனப் பல்வேறு வகைகளில் கட்டப்பட்டன. டிஜிட்டல் நூலகம், இணைய வழிப் படிப்புகள் மற்றும் மின்னணுச் சேவைகள் வழங்கப்படுகின்றன. கிராமப்புற சமூக பொருளாதார மேம்பாடு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குதல். கிராம அறிவு சார் மையத்தின் பணிகள் ஆகும். மண் பரிசோதனை, வானிலை தரவுகள், பயிர் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இணைய வழிக் கல்வியறிவு, போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், கணினிப் பயிற்சி, சமூக நலன், அரசுத் திட்டங்கள், நிதிச் சேவைகள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கான ஆலோசனைகள் இந்த மையங்கள் ஊரகப் பகுதியில் உள்ள மாணவர் மற்றும் இளைஞர்களின் திறனை மேம்படுத்தி,
அவர்களைத் தொழில்நுட்ப யுகத்திற்குத் தயார்படுத்த உதவுகின்றன. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சியில் வார்டு எண் 1 லாயம் புது தெருவில் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் கிராம அறிவுசார் மையம் மண்டபம் ரூ. 77.89 லட்சம் மதிப்பீட்டில் திமுக ஆட்சியில், தாட்கோவின் மூலம் கட்டப்பட்டது. கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது வரை அந்த அறிவு சார் மையம் திறக்கப்படாமல் உள்ளது. எனவே எப்போது அறிவு சார் மையம் திறக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்து உள்ளனர்.
