திருவாரூர், நவ.2: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற குரூப் 2,2ஏ தேர்வினை மொத்தம் 5 ஆயிரத்து 921 பேர்கள் எழுதினர்.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தினால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப் -2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வானது நேற்று காலை 9.30 மணி முதல் 12.30 மணிவரை மாநிலம் முழுவதும் நடைபெற்றது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் இந்த தேர்வினை எழுதுவதற்காக மொத்தம் 7 ஆயிரத்து 118 பேர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் இவர்களுக்காக திருவாரூரில் 7 தேர்வுமையங்களிலும், மன்னார்குடியில் 5 தேர்வுமையங்களிலும் மற்றும் திருத்துறைப்பூண்டியில் 3 தேர்வு மையங்களிலும் அமைக்கப்பட்டு இந்த தேர்வானது நடைபெற்றது.
இதில் திருவாரூரில் 2 ஆயிரத்து 724 பேர்களும், மன்னார்குடியில் ஆயிரத்து 789 பேர்களும், திருத்துறைப்பூண்டியில் ஆயிரத்து 408 பேர்களும் என மொத்தம் 5 ஆயிரத்து 921 பேர்கள் இந்த தேர்வினை எழுதிய நிலையில் ஆயிரத்து 197 பேர்கள் பல்வேறு காரணங்களால் தேர்வு எழுத வரவில்லை. மேலும் திருவாரூர் புதுத்தெருவில் இயங்கி வரும் நியூ பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வினை கலெக்டர் மோகனசந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர் கூறுகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைகளின்படி, நடத்திடும் பொருட்டு 3 கண்காணிப்பு அலுவலர்கள், 6 இயக்கக்குழு அலுவலர்கள், 24 முதன்மை கண்காணிப்பு அலுவலர்கள், 3 பறக்கும் படைஅலுவலர்கள் மற்றும் 27 புகைப்படகலைஞர்கள் ஆகியோர் தேர்வுப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
மேலும் தேர்வுஎழுதும் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு தரைத்தளத்தில் தேர்வு எழுத வசதியும் மற்றும் பார்வையற்றோர் தேர்வு எழுதிட மாற்று நபர் மற்றும் தனிஅறைகள் கொண்டவசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி தேர்வுமையத்தில் பாதுகாப்பு பணியில் போதிய காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் தேர்வெழுதக்கூடிய தேர்வர்களுக்கு தேவையான போதிய போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.


