Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிங்கில் பேஸ் இணைப்புக்கு ரூ.4,000 லஞ்சம் வாங்கிய லைன் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

திருவள்ளூர், பிப்.28: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆயிஷாபேகம். இவர், கடந்த 2012ம் ஆண்டு தனது சிமெண்ட் சீட் போட்ட வீட்டிற்கு சிங்கிள் பேஸ் மின் இணைப்பு கேட்டு, மேலுார் மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். அப்போது, அங்கு பணியிலிருந்த லைன் இன்ஸ்பெக்டர் மதியழன் (60), புதிய மின் இணைப்பு வழங்க ரூ.4,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து ஆயிஷாபேகம், கடந்த 8.5.2012 அன்று சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் வேலன் சுப்பிரமணி ஆலோசனையின்பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஆயிஷாபேகத்திடம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மதியழகனிடம், ஆயிஷா பேகம் வழங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார்இ மதியழகனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, அரசு வழக்கறிஞர் அமுதா ஆஜராகி வாதாடினார். இந்த, வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி டாக்டர் ஜூலியட் புஷ்பா, லஞ்சம் வாங்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மதியழகனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.