ஊத்துக்கோட்டை, ஆக.13: ஊத்துக்கோட்டை - திருவள்ளுர் நெடுஞ்சாலையில் ஊத்துக்கோட்டையில் ஆரணியாற்றின் குறுக்கே ரூ.27 கோடியில் புதிதாக மேம்பாலப்பணிகள் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கி 2021ம் ஆண்டு முடிவடைந்தது. இந்த பாலத்தை ஊத்துக்கோட்டை மற்றும் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் மழையின்போது இந்த பாலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரில் பொதுமக்கள் வழுக்கி விழுகிறார்கள். மேலும், மணல் திட்டுகளும் அதிகளவில் சேர்ந்துள்ளதால், பைக்கிள் செல்பவர்கள் இதில் சிக்கி கிழே விழுகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மணல் திட்டுகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் மீது, இந்த வழியாக செல்லும் மணல் லாரிகளில் இருந்து மணல் சிதறி விழுந்து, பாலத்தின் மீது மணல் திட்டுகள் காணப்படுகிறது. மேலும், சமீபத்தில் பெய்து வரும் மழையால் பாலத்தின் மீது தண்ணீரும் தேங்கி நிற்கிறது. இதனால், பாலத்தின் மீது பைக்கில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் கிழே விழுந்து விடுகிறோம். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மழை நீரையும், மணல் திட்டுக்களையும் அகற்ற வேண்டும் என்றனர்.
+
Advertisement


