டெல்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் தமிழக-ஆந்திர எல்லையில் வாகன சோதனை தீவிரம்
திருத்தணி, நவ.12: டெல்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, திருத்தணியில் தமிழக -ஆந்திர மாநிலங்களின் எல்லையில் கண்காணிப்பு பணியில் உள்ள போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் நேற்று முன்தினம் இரவு காரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 9 பேர் உடல் சிதறி இறந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து சேதமானது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பஸ், ரயில் நிலையங்கள், பூங்கா, வணிக வளாகங்கள், மால்களில் போலீசார் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பி விவேகானந்தா சுக்லா உத்தரவின்பேரில், திருத்தணி அருகே தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியான சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, பொன்பாடி சோதனை சாவடியில் போலீசார் நேற்று கண்காணிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். வடமாநிலங்களில் இருந்து ஆந்திர வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். முழு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தமிழக எல்லையில் நுழைய போலீசார் அனுமதக்கின்றனர். இதேபோல், பஸ், ரயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை: டெல்லியில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பஸ், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர் ரயில்வே காவல் நிலையம் சார்பில் போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடமைகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். அதன்பிறகு, பயணிகள் ரயில் நிலையத்திற்குள் நுழைய அனுமதித்தனர். அதேபோல், மின்சார ரயில்களில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதனால், திருவள்ளூர் ரயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.