சென்னை, டிச.10: தெருவில் விளையாடிய 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சென்னை புளியந்தோப்பு பகுதியில் கடந்த 2021 மே 17ம் தேதி தனது வீட்டின் அருகே விளையாடிய 8 வயது சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த வாலிபர் டில்லிபாபு என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய புளியந்தோப்பு மகளிர் போலீசார், டில்லிபாபுவை கைது செய்து, அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.பத்மா முன் விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள், சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் டில்லிபாபுவுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
+
Advertisement


